7 லட்சம் தவழும் மாற்றுத்திறனாளிகளின் குமுறல்கள்!
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பலவற்றில் தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவான கழிப்பறை வசதியின்றி மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நெடுநாள் கோரிக்கைக்கு இதுவரை தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ செவிசாய்க்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக தேசிய அளவில் மதுரை மாவட்டம் சிறந்து விளங்குகிறது என்ற அடிப்படையில் குடியரசுத்தலைவரிடம் நவம்.3-ம் தேதி, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விருது பெற்றுள்ள நிலையில், தவழும் மாற்றுத்திறனாளிகளின் குமுறல்கள் தற்போது எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இதுகுறித்து தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜா நமது ஈநாடு வலைதளத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'மாற்றுத்திறனாளிகளில் தவழும் மாற்றுத்திறனாளிகளின் நிலை மிகவும் அவலத்திற்குரியதாக உள்ளது. அவர்களும் இந்த சமூகத்தின் ஓரங்கம் என்பதை பொதுமக்களிலிருந்து அதிகாரிகள் வரை பார்க்கத் தவறிவிட்டனர்.
தவழும் மாற்றுத்திறனாளிகளின் நிலையைக் கருத்திக் கொண்டு அவர்களுக்குரிய கழிப்பறை வசதிகளோடுதான் அரசு அலுவலகங்களோ, தனியார் நிறுவனங்களோ, திரையரங்குகள் உள்ளிட்டவை கட்டப்பட வேண்டும் என்று அரசு ஆணை இருந்தபோதும்கூட, இதுவரை எங்கள் குரலுக்கு யாரும் மதிப்பளிக்கவில்லை.
இரண்டு கைகளையும் ஊன்றி, கால்களால் தேய்த்து சாலையில் செல்வதே மிக சிரமமாக இருக்கும்நிலையில், அவர்கள் கழிப்பறைகளுக்குள் செல்வதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்... சாதாரணமாகவே நமது கழிப்பறைகள் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை நான் விளக்க வேண்டியதில்லை. அதே கைகளில்தான் நாங்கள் உணவும் உண்ண வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக விருதினைப் பெறும் மதுரை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திலேயே அது போன்ற கழிப்பறை இல்லை. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும்கூட கிடையாது' என்று வேதனை தெரிவிக்கிறார்.
தவழும் மாற்றுத்திறனாளி ஆண்களைக் காட்டிலும், அப்பிரிவிலுள்ள பெண்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது என்று கூறும் ராஜா, எங்களுக்கு சலுகைகள் தருவது இருக்கட்டும். முதலில் நாங்கள் செல்லுமிடங்களில் இயற்கை உபாதையைக் கழிக்க எங்களுக்கு ஏதுவான கழிப்பறைகளை முதலில் கட்டித்தாருங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேல் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களில் ஏறக்குறைய 7 லட்சம்பேர் தவழும் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களின் நிலையைக் கருத்திற் கொண்டு தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை தங்களின் வேண்டுகோளாக முன் வைக்கின்றனர்.
- ஷாகுல்