கடன் பெற்றுத்தருவதாகக் கூறி 6.90 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சேலத்தைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சோபன்னாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 44). இவர் நிலத்தை அடகு வைத்து ஒரு கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு மூலமாக அதற்கான ஏற்பாடுகளை செய்தார். கடன் கொடுப்பதற்கான ஆவண செலவுகள் உள்பட பல்வேறு செலவுகளுக்காக கண்ணனிடம் இருந்து 6.90 லட்சம் ரூபாய் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் திருநாவுக்கரசு வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் கூறியபடி, கடன் எதுவும் கொடுக்கவில்லை. அதற்காக கொடுத்த முன்பணம் மற்றும் ஆவணங்களையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்தார். இதுகுறித்து கண்ணன் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, உடந்தையாக இருந்த சிவா, சரவணன், வைத்தீஸ்வரன், ரங்கநாதன், மோகன்குமார் ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.