![600 crore relief for farmers - Chief Minister's announcement](http://image.nakkheeran.in/cdn/farfuture/oZVEB53ZaLryULL_Y600B53yV3LbXu3VJNn7KOXZb_Q/1609588536/sites/default/files/inline-images/e74574_1.jpg)
நிவர், புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பல இடங்கள் பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து வீசிய நிவர், புரெவி புயல்கள் காரணமாக, பல்வேறு இடங்களில் வேளாண் பயிர்கள் நாசமாகின. இந்த இரண்டு புயலாலும் பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக் குழு ஆய்வுசெய்தது. நிவர் புயல் சேதத்தை தற்காலிமாகச் சீரமைக்க 641 கோடியும், நிரந்தரமாக சீர்செய்ய 3,100 கோடி எனவும் மொத்தம் 3,741 கோடி ரூபாய், மத்திய அரசிடம் கோரப்பட்டது. அதேபோல், புரெவி புயல் பாதிப்புகளை நிரந்தரமாக சீர்செய்ய 1,514 கோடி ரூபாய் கோரப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 600 கோடிக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புயல் பேரிடரால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், இடுபொருள் நிவாரணம் வழங்க உச்சவரம்பில் தளர்வளிக்கப்பட்டுள்ளது. 2 ஹெக்டேர் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுமைக்கும் நிவாரணம் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 7-ஆம் தேதி முதல் விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.