திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது மங்கலம் ஊராட்சி. இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், காவல்நிலையம், ஆரம்பசுகாதார நிலையம், வங்கிகள், திருமண மண்டபங்கள், பத்திரபதிவு அலுவலகம் உள்ளது.
மங்கலத்தை சுற்றியுள்ள 50க்கும் அதிகமான கிராம மக்கள், பள்ளி மாணவ – மாணவிகள், விவசாயிகள் இங்கு தான் வருவார்கள். இதனால் தினமும் 25 ஆயிரம் பொதுமக்கள் வெளி கிராமங்களில் இருந்து மங்கலம் வந்து செல்கின்றனர். இதனால் இங்கு பலப்பல கடைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான கடைகள் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலை துறையின் இடத்தில் இயங்கிவந்தன. பலர் கட்டிடங்களாக கட்டி வாடகைக்கும் விட்டிருந்தனர். அப்படி வரும் மக்களுக்கு கழிப்பிடங்கள் கிடையாது, பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை கிடையாது, இதனால் பொதுமக்கள் பெரிதும் துன்பப்பட்டனர். அடிப்படை வசதியற்றவையாக உள்ள இக்கிராமத்தை மாற்ற விரும்பினார் அதே மங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்.
கடந்த 2006 முதலே அப்போதைய ஆளும்கட்சியான திமுகவினரை சந்தித்து ஆக்ரமிப்புகளை அகற்றி கழிப்பிட கட்டிடம், நிழற்குடை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அதன்பின் 2011ல் அதிமுக ஆட்சி வந்தது. கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்.எல்.ஏவான அரங்கநாதனிடம் முறையிட்டார், ஒன்றும் நடக்கவில்லை. முதல்வர் அலுவலகம் சென்று புகார் தந்துவிட்டு வந்தார், நடவடிக்கவில்லை. அதன்பின் அப்போதைய முதல்வர் ஜெ. வின் வீட்டுக்கே சென்று புகார் மனு தந்துவிட்டு வந்தார். அதன்பின் அசைந்துக்கொடுக்க துவங்கினர் மாவட்ட அதிகாரிகள்.
நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை இடத்தை ஆக்ரமித்தவர்களை அப்புறப்படுத்த முடியவில்லை. அதிமுக, திமுக, பாமக உட்பட அனைத்து அரசியல்கட்சியின் உள்ளுர் பிரமுகர்கள் ஆக்ரமிப்பை இடிக்ககூடாது என அதிகாரிகளுக்கு நெருக்கடி தந்தனர்.
இராஜேந்திரன், அன்சூல் மிஸ்ரா, விஜய் பிங்ளே, பிரசாந்த் வடநேரே, ஞானசேகரன் என அதிகாரிகள் மாறினார்களே தவிர ஆட்சியாளர்களின் அதிகாரத்தை மீறி எதுவும் செய்ய முடியாமல் தவித்தனர்.
விஜயகுமாரும் விடாமல், மாநில, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பினார். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் கேட்டார். மனுநீதிநாள் முகாமில் தொடர்ச்சியாக மனுக்கள் தர அதன்பின் ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என அகற்றினர். ஆனால், வசதிகள் செய்து தருவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டனர் ஆளும்கட்சியினரும், அரசியல்வாதிகளும். இதனால் மீண்டும் அந்த இடத்தை ஆக்ரமித்து 15 கடைகள் உருவாகின. இதனால் காலியாகவுள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை மனுக்களை தரத்துவங்கினார்.
இந்நிலையில் கழிப்பறை கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த பணியை செய்ய விடாமல் மீண்டும் ஆளும்கட்சியினர் தடுக்கின்றனர். இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவாக இருப்பவர் திமுகவை சேர்ந்த பிச்சாண்டி. அவரிடம் சென்று பயணிகள் நிழற்குடை மற்றும் நூலகம் கட்டி தாருங்கள், அதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதிஒதுக்குங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். அதனை தெரிந்துகொண்ட உள்ளுர் திமுக பிரமுகர்கள், பாதிக்கப்படுகின்ற 30 குடும்பத்தார்கள் நமக்கு ஓட்டுப்போடமாட்டார்கள் என அவரிடம் கூறி அவர் நிதி ஒதுக்குவதையும் தடுத்துள்ளனர். அதிமுகவினர் சுமார் 15 லட்சம் வரை பணம் வாங்கிக்கொண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக நடந்து வருகின்றனர் என்கிறார் விஜயகுமார்.
தனிப்பட்ட விவகாரத்துக்காக அல்லாமல் பொது விவகாரத்துக்காகத் தான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிவருகிறேன், நல்ல முயற்சி என பாராட்டுபவர்கள் கூட இதற்காக துணை நிற்பதில்லை. இதற்காக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துவிட்டேன். இருந்தும் விடாமல் போராடுவதற்கு காரணம், கழிப்பறை, நிழற்குடையில்லாமல் தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்படுவதை காண்பதால் தான் தனி ஒருவனாக நின்று போராடிக்கொண்டு இருக்கிறேன். ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக மட்டும்மல்லாமல் ஆக்ரமிப்பாளர்கள் தரும் பணத்துக்காகவும் மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள். என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அதனைக்கொண்டு உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கலாம் என்கிற யோசனையில் உள்ளேன் என்கிறார்.
ஓட்டுக்காக பொதுமக்களுக்கு தெரியும் வகையில் கெட்டதைத் தான் செய்யமாட்டார்கள் ஆட்சியாளர்கள் என்றால் நல்லதும் செய்ய மறுக்கிறார்களே!