கடந்த இரு தினங்களுக்கு முன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று அவரக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில் கமல் மீது அவரக்குறிச்சியில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .
இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தோப்பூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசுகையில், மக்கள் நீதி மய்யம் என்றுமே மக்களுக்கானது. நான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொன்னது சரித்திர உண்மை. நான் அவரக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். எனக்கு பல இடங்களில் பெருமை கிடைக்கிறது சில இடங்களில் அவமானப்படுத்துகிறார்கள். நான் பேசுவது நிஜம். நான் நினைத்திருந்தால் பயங்கரவாதி என்றோ கொலைகாரன் என்றோ சொல்லியிருக்கலாம். நீங்கள் கூடதான் என் தீவிர ரசிகர்கள் (கூட்டத்தை நோக்கி) எங்கள் பேச்சில் இனி தீவிர அரசியல் பிறக்கும்.
என்னயுடைய கொள்கையை வீழ்த்த என் கொள்கையையே கையில் எடுக்காதீர்கள் தோற்றுப்போவீர்கள். இந்த அரசை வீழ்த்துவோம். வீழ்த்துவோம் என்றால் வன்முறையால் அல்ல ஜனநாயகத்தால்.. வெள்ளை வேட்டியில் சிறு கரைக்கூட படாமல் நீங்கள் வீட்டுக்கு போகலாம். நான் எந்த இடத்திலும் நான் எந்த மதத்தையும், சாதியையும் பற்றி சந்தோசமாக பேசுவேன், விமர்சித்து பேசுவேன் காரணம் இது என் மக்கள். அந்த உரிமையில் சொல்கிறேன். நான் படம் எடுப்பதும் அப்படிதான். கோபப்படுபவர்கள் தயவு செய்து ஹேராம் படத்தை பாருங்கள்.. அத சொல்லி 20 வருஷம் ஆகுது. மருந்து கசப்புதான். உங்கள் வியாதி மாற இந்த கசப்பு உதவும் என்றார்.