அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் மூத்த மருத்துவர்கள் ஆறு பேருக்கு முதல்வராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. மூன்று முதல்வர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் சென்னை, தஞ்சை, திருச்சி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த மூத்த பேராசிரியர்கள் 6 பேர், முதல்வராக (டீன்) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தேனி, பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குநர் ஆகிய மூவரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.
இதன்படி, மருத்துவக்கல்வி இயக்குநரகத்தின் சிறப்பு அதிகாரியும், பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருமான மீனாட்சி சுந்தரம் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். விடுப்பில் சென்றிருந்த, மருத்துவக்கல்வி இயக்கக கூடுதல் இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றி வந்த பேராசிரியர் முத்துக்குமரன் ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி இருதயவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராகவும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கண் மருத்துவத்துறை பேராசிரியர் சீனிவாசன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
எம்எம்சி மருத்துவக் கல்லூரி உடலியல் துறை பேராசிரியர் மற்றும் இயக்குநர் திருப்பதி, கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராகவும், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியரும் மருத்துவக் கண்காணிப்பாளருமான ராஜஸ்ரீ திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
எம்எம்சி அரசு மருத்துவக்கல்லூரி ஹெபடாலஜி துறை பேராசிரியர் நாராயணசாமி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், திருச்சி கேஏபி விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியர் சிவக்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.