தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவிற்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது விசிக தலைவர் அண்ணா அறிவாலயம் சென்று, தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 6 இடங்களில் தனி சின்னத்தில் விசிக போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இன்று (04.03.2021) விசிக நிர்வாகிகள் காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் விசிக தலைவர் திருவமாவளவன் பங்கேற்றார். இந்நிலையில் திமுக 6 தொகுதிகளை விசிகவிற்கு ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ‘திமுக வெறும் 6 தொகுதிகளை ஒதுக்கினால், ஏற்கக்கூடாது’ என விசிகவினர் முழக்கமிட்டு சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு அங்கு வந்த விசிக தலைவர் திருமாவளவன், “அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டுதான் முடிவு எடுக்கப்படும். சில நேரங்களில் மனஉளைச்சல் ஏற்படும் சூழல் அமையலாம். ஆனால் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் நாம் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். யாரும் எந்தக் கோஷமும் போடக்கூடாது, பிரச்சனை செய்யக் கூடாது'' என்று கூறி, அண்ணா அறிவாலயம் புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.