சென்னை ஓமந்தூரார் மருத்துமனை முன்பாக பணி நிரந்தரம் வேண்டி தற்காலிக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்தில் அவர்கள், ‘தமிழகத்தில் டி.என்.பி.சி, டி.ஆர்.பி போலவே, எம்.ஆர்.பி. தேர்வின் மூலமாக தேர்ச்சி பெற்று தற்காலிக பணி செய்து வருகிறார்கள் செவிலியர்கள். மற்ற அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற உடனே அரசு பணி வழங்கி நிரந்தரம் செய்யும் அரசு எங்களுக்கு மட்டும் இரண்டு வருடம் பணி செய்யுங்கள் அதன் பிறகு பணி நிரந்தரம் செய்வோம் என்று முந்தைய அரசு சொன்னது. ஆனால், 7 வருடம் கழித்தும் இது நாள்வரையிலும் எங்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை என இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மதியம் செவிலியர் சங்கத்தினர் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்தை சந்தித்து பேசியிருந்தனர். அப்பொழுது இந்த ஒராண்டிற்குள் 5,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தருவதாகவும், 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை எம்.ஆர்.பி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இருக்கக்கூடிய 5,000 நபர்களை தேர்ந்தெடுத்து ஓராண்டிற்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். தற்பொழுது 230 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார். ஓய்வு பெறுவோரின் வயது உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் 2 ஆண்டுகள் பணி ஓய்வு பெறவில்லை. இந்தாண்டு பணி ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அதன்படி காலி பணியிடங்கள் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.