தமிழகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள், கூலி வேலை செய்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மே 21ந் தேதி காவல்துறை அனுமதியில்லாமல் மக்களுக்காக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடு, 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தும் தொழிலாளர் நலச்சட்டத்தை திருத்தாதே, புதிய பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் ஒதுக்கியுள்ள 20 லட்சம் கோடியில், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துடு என்கிற 5 கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன் நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டனர். இவர்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்க நூற்றுக்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட தலைநகரம் மட்டும்மல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய கிராமங்களிலும் சிபிஐ நிர்வாகிகள் செங்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.