Skip to main content

தமிழக டெல்டா பகுதிகளில் 50% கூடுதல் மழை; மேலும் மழைபெய்ய வாய்ப்பு!

Published on 10/09/2017 | Edited on 10/09/2017
தமிழக டெல்டா பகுதிகளில் 50% கூடுதல் மழை; மேலும் மழைபெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 50% மற்றும் சென்னையில் 25% கூடுதலாக மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல் வெளியிட்டுள்ளார்.



கடந்த 150 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தமிழகம் வறட்சியால் பாதிப்படைந்துள்ளது. மழை இல்லாத காரணத்தால், பல விவசாயிகள் விவசாயத்தை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இருநாட்களுக்கு இந்த கனமழையானது நீடிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வானிலை சம்பந்தமான தகவல்களை சமூகவலைதளங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன், ‘பொதுவாக கடலில் இருந்து மேகங்கள் வடகிழக்கு பருவமழைக் காலங்களில்தான் பயணிக்கும். ஆனால், வங்காள விரிகுடா கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள மேல்காற்று சுழற்சியால் தான் மேகங்கள் நிலப்பரப்பை நோக்கி பயணிக்கின்றன. இந்த மேல்காற்று சுழற்சியானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக மாறிவிடக்கூடாது’ என ஆங்கில ஊடகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பயன்பெற்றுள்ளன. கும்பகோணத்தில் அதிகபட்சமாக 16செமீ மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 25ல் நல்ல மழைபொழிவு இருந்ததால், இந்த மழை அளவு 50% கூடுதலானது என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையிலும் 25% கூடுதல் மழைப்பொழிவு கிடைத்துள்ளது.

மேலும், இருநாட்களுக்கு மழை பொழியலாம் என்றாலும், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் சாதாரண சாரல்மழை மட்டுமே பொழியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்