
வடமாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 குடும்பத்தினர் விழுப்புரம் அருகே ஒப்பந்த அடிப்படையில் மண்ணில் பைப் புதைக்கும் பணிக்கு வந்துள்ளனர். இந்த 50 குடும்பத்தைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்டோர் தனது உடைமைகளுடன் குழந்தைகளை அழைத்து வந்து இங்கேயே தங்கி வேலை செய்துள்ளனர்.
ஆனால், திடீரென பைப் புதைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வேலை திரும்பத் தொடங்கியதும் அழைக்கிறோம் எனச்சொல்லி அந்த நிறுவனத்தில் வேலைக்கு எடுத்த ஒப்பந்ததாரர்கள் கூறியுள்ளனர். இதனால் 50 பேரும் வேலையை இழந்துள்ளதாக கூறப்படுகின்றன. மாற்று வேலையை கிடைக்க விழுப்புரத்திலேயே சில தினங்கள் காத்திருந்ததாகவும், ஆனால் வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அன்றாட தேவைக்கு கையில் இருந்த பணத்தை செலவழிந்து வந்துள்ளது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் கையில் குறைந்த அளவு பணத்தை வைத்துள்ளதால் வேறு வழியின்றி அனைத்து வடமாநிலத்தவரும் விழுப்புரத்திலிருந்து செஞ்சி சேத்பட் வழியாக ஆரணி அருகே களம்பூர் ரயில் நிலையத்திற்கு தனது உடைமைகளை சுமந்து கொண்டும், கையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டும் சுமார் 95 கிலோ மீட்டர் தூரம் வரையில் கடந்த 3 தினங்களாக நடந்தே வந்துள்ளனர். போளூர் பேசிய நெடுஞ்சாலையில் நடந்து வரும் பொழுது இதனைப் பார்த்த பகுதி இளைஞர்கள் சந்தேகப்பட்டு அவர்களிடம் விசாரித்த போது மேற்கண்ட தகவலை கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்பொழுது அதீதமாக 100 டிகிரியை தாண்டிவெயில் சுட்டு எரிக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் 27 முதல் 29ஆம் தேதி வரை வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என அறிவித்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் சூழலில் தார் சாலையில் வட இந்திய மக்கள் நடந்து 95 கிலோ மீட்டர் வந்தது அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.