போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்றபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், ''பெண்கள் இலவசமாக பயணிக்கின்ற காரணத்தினால் அவர்களுடைய எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பேட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதையும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பேருந்து கழகத்திற்கும் தனித்தனியாக நிலை ஆணை இருப்பதை மாற்றி பொதுவான நிலை ஆணை இருக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள், அத்தனையும் ஏற்று நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சங்கங்களின் சார்பில் 8 சதவிகித ஊதிய உயர்வு வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு சார்பாக முதற்கட்டமாக 01/09/ 2019 ல் இருந்து 2 சதவிகித ஊதிய உயர்வும், 01/01/2022ல் இருந்து அடுத்தகட்ட 3 சதவிகித ஊதிய உயர்வும் என மொத்தம் 5 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற உறுதியைக் கொடுத்துள்ளோம்'' என்றார்.