யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்தால் போதும் கோடீஸ்வரர் ஆகலாம் என ஆசை காட்டி ஏமாற்றிய 5 நபர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை முகப்பேரை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் ஒரு நாள் வெளிநாட்டு வாட்ஸ்அப் எண்ணில் இருந்து வந்த மெசேஜ் ஒன்றில் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்தால் போதும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற விளம்பரம் ஒன்று வந்ததாகவும், தொடர்ந்து யூடியூபில் சப்ஸ்கிரைப் செய்து முடித்தவுடன் வெளிநாட்டில் இருந்து அனுசுயா என்பவர் தொடர்புகொண்டு பேசினார். முதலில் ஒரு குறிப்பிட்ட சிறு தொகையை அனுப்பி வைத்தேன். மீண்டும் பணம் கிடைத்தது. இப்படியே 25 ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு திரும்பப் பெற முயன்றபோது பணம் கிடைக்கவில்லை. இதுவரை இதுபோல் 18 லட்சம் வரை ஏமர்ந்ததாக தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பிரவீன் குமார், வீரராகவன், அசோக்குமார், டார்லா பிரவீன் குமார், ராஜ ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். ஐந்து பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வங்கி கணக்கு உருவாக்கி கொடுத்து மலேசிய மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பி, இவ்வாறு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் அனுப்ப வைத்ததற்கு கமிஷன் பெற்று வந்தது தெரியவந்தது.