5 கிலோ: கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது
வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் சியாமளாதேவிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நேற்று காலை வியாசர்பாடி அண்ணா தெருவில் ரகசியமாக கண்காணித்தனர். சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த திலகா என்கின்ற ஸ்டெல்லா (35) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, கஞ்சா விற்பவர் என்பது தெரிந்தது. அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.60 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.
திலகா கொடுத்த தகவலின் பேரில், வியாசர்பாடி பிவி காலனி 19வது தெருவை சேர்ந்த தாமஸ் (38), இவரது மனைவி பார்வதி (32), இவரது தம்பி மணலி புதுநகரை சேர்ந்த கார்த்திக் (22) என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து மாதவரம், மஞ்சம்பாக்கத்தில் வைத்து சிறு சிறு பொட்டலமாக வியாசர்பாடி, கொடுங்கையூர், செம்பியம் ஆகிய பகுதிகளில் பல வருடங்களாக விற்று வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரை, நேற்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.