சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று (09/08/2022) மாலை 05.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில் டிரம்ஸ் கலைஞர் சிவமணி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல், பியானோ கலைஞர் ஸ்டீபன் தேவசி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழா மேடையில் டிஜிட்டல் திரையில் முன்னாள் முதலமைச்சர்களின் படம் இடம் பெற்றது. ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை முன்னாள் முதலமைச்சர்கள் படம் டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் செய்த சாதனைகளை பெருமைப்படுத்தும் விதமாக காட்சிப் பதிவு அமைந்திருந்தது.
குறிப்பாக, ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் பெருமைப்படுத்தும் வீடியோ பதிவும் இடம் பெற்றிருந்தது. சுதந்திரப் போராட்ட தியாகிகள், பெரியார், காயிதே மில்லத், முத்துராமலிங்கத் தேவர் படமும் இடம் பெற்றது.
தமிழ் மண் நிகழ்த்துக் கலையின் இரண்டாம் பாகம் நிறைவு விழாவில் நிகழ்த்திக் காட்டப்பட்டது. தமிழ் மண் நிகழ்த்துக் கலையின் முதலாம் பாகம் தொடக்க விழாவில் ஒளிபரப்பப்பட்ட நிலையில், இரண்டாம் பாகம் இடம் பெற்றுள்ளது. நடிகர் கமல்ஹாசன் குரலில் இடம்பெற்றுள்ள தமிழ் மண் நிகழ்ச்சி பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுதந்திரப் போரில் தமிழ்நாடு விடுதலை வீரர்களின் பங்கு குறித்து வீடியோவில் இடம் பெற்றுள்ளது. மருதநாயகம், கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் குறித்து நிகழ்த்துக்கலை இடம் பெற்றுள்ளது. வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் சிவாஜி பேசிய வசனமும் விழாவில் நடித்துக் காட்டப்பட்டது.
வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு புகழாரம் சூட்டப்பட்டது. அயோத்திதாச பண்டிதர், பாரதியார், வ.உ.சி., குறித்தும் விடுதலை வரலாறு கலை நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது.