4 வயது குழந்தையை சீரழித்துக் கொன்ற மிருகத்தை
விரைந்து தண்டிக்க வேண்டும்!அன்புமணி இராமதாஸ்
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை :
’’திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் 4 வயது குழந்தையை அதேபகுதியைச் சேர்ந்த ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மனசாட்சியும், மனிதத்தன்மையும் இல்லாத மிருகங்களால் மட்டும் தான் இத்தகைய அரக்கத்தனங்களை அரங்கேற்ற முடியும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொம்பேறிப்பட்டியைச் சேர்ந்த சிவகாமி&ஜெயக்கண்ணன் இணையரின் 4 வயது குழந்தை மகாலட்சுமி கடந்த 14&ஆம் தேதி அவரது பாட்டியுடன் நியாயவிலைக்கடைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, அருகிலுள்ள குப்பாம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவன் இருவரையும் இரு சக்கர ஊர்தியில் அழைத்துச் சென்றுள்ளான். பாட்டியை அவரது வீட்டில் இறக்கி விட்ட ராஜ்குமார், குழந்தையை அங்குள்ள அங்கன்வாடியில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளான். ஆனால், அங்கன்வாடியில் விடுவதற்கு பதிலாக அருகிலுள்ள மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அக்கொடுமையைத் தாங்க முடியாமல் அக்குழந்தை இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. குழந்தையின் உடலை புதரில் வீசிய ராஜ்குமார், குழந்தையின் உடல் மீது கற்களை அடுக்கி வைத்து வீட்டு ஓடி விட்டான்.
குழந்தையை காணாமல் தவித்த பெற்றோர் ராஜ்குமாரை பிடித்து விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது. இதுதொடர்பாக பெற்றோரும், பொதுமக்களும் அளித்த புகார் அடிப்படையில் ராஜ்குமாரை வடமதுரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்த தகவல் எனக்குக் கிடைத்ததும் பா.ம.க. துணைத்தலைவர் திலகபாமா தலைமையில் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளை அனுப்பி இதுகுறித்து விசாரித்ததுடன், பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற வைத்தேன். பா.ம.க.வினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. சிறுமியைச் சீரழித்த 17 வயது இராஜ்குமார் மீது வடமதுரை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன் ராஜ்குமாரின் பாட்டி மர்மமான முறையில் இறந்துள்ளார். ஆனால், அவரை ராஜ்குமார் தான் கொன்று விட்டதாகக் கூறப்படுகிறது. குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு இருந்த அவன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் விடுதலையாகியுள்ளான். அதற்குள் மிருகத்தனமாக ஒரு குழந்தையை சீரழித்துக் கொன்று மீண்டும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.
வடமதுரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான குற்றங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும் நடக்கின்றன. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மாறாக, காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து மட்டும் தான் முழுநேரத் தொழிலாக நடைபெற்று வருகிறது. அதனால் தான் ராஜ்குமார் போன்ற இளம் குற்றவாளிகள் அச்சமின்றி கொடூரமான குற்றங்களைச் செய்யும் அளவுக்கு துணிச்சல் பெற்றுள்ளனர். குழந்தை சீரழிக்கப்பட்டதற்கு காவல்துறையின் அலட்சியமே காரணமாகும். இவ்வழக்கை வேடச்சந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் நேர்மையாக விசாரிப்பது மட்டுமே ஒரே ஆறுதலாகும்.
கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் சிறந்த தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையும், வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தில் கடந்த காலங்களில் நிகழ்ந்த இத்தகையக் குற்றங்களுக்கு சரியான தண்டனை வழங்கப்படாதது தான் இதற்குக் காரணம் ஆகும். உலகையே அதிரவைத்த தில்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையால் ஏற்பட்ட வேதனை உணர்வு விலகும் முன்பே 2012&ஆம் ஆண்டு திசம்பர் 20&ஆம் தேதி தூத்துக்குடியை அடுத்த தாதன்குளம் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் புனிதா என்ற 13 வயது மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் உடனடியாக தண்டனை இரு ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை மட்டுமே வழங்கப்பட்டது.
அதுபோல் இல்லாமல் குழந்தை மகாலட்சுமியை சீரழித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கை விரைவாக விசாரித்து ராஜ்குமாருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். நிர்பயா படுகொலைக்குப்பின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்த 13 கட்டளைகளின்படி விரைவு நீதிமன்றம் அமைத்து, பெண் வழக்கறிஞர்களை நியமித்து இவ்வழக்கை தினசரி விசாரித்து தீர்ப்பளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி 16 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே சிறுவர் நீதிச்சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்பதால், ராஜ்குமார் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். ராஜ்குமார் வெளியில் வந்தால் மேலும் பல குற்றங்களில் ஈடுபடக்கூடும் என்பதால், இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் வரை அவனுக்கு பிணை வழங்கப்படாமலிருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.''