திருச்சியை அடுத்த ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்துவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த காமராஜின் சித்தி மகன் சசிகுமார், புங்கனூர் அருகில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்திவருகிறார். பேக்கரி கடையில் கிராமிய நகரைச் சேர்ந்த ராஜா, அஜித், பெங்களூருவைச் சேர்ந்த குட்டிமணி, கள்ளிக்குடியைச் சேர்ந்த மகேந்திரன் ஆகிய 4 பேரும் டீ குடிக்க வந்துள்ளனர்.
மேலும், சிகரெட் வாங்கியுள்ளனர். அதற்கான பணத்தைக் கேட்டபோது கடையை அடித்து நொறுக்கி, சசிகுமாரை அரிவாளால் வெட்டி, அவரது செல்ஃபோனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திய வழக்கறிஞர் காமராஜ், வாலிபர்களை எச்சரித்து அவர்களிடம் இருந்த செல்ஃபோனை திரும்ப வாங்கிச் சென்றுள்ளார். இதுகுறித்து சோமரசம்பெட்டை காவல் நிலையத்தில் சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில், வழக்கறிஞரின் வீட்டுக்குச் சென்ற அந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அரிவாளால் கதவைத் தட்டி வெளியே வரச்சொல்லி மிரட்டியுள்ளனர். வழக்கறிஞர் காமராஜ் கதவைத் திறக்க மறுக்கவே வீட்டு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனம், ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராம்ஜிநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து தப்பிச் சென்ற நான்கு பேரையும் தேடிவருகின்றனர்.