மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையைச் சேர்ந்த நால்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் உள்ளது எக்கியார் குப்பம். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 16 பேர் அப்பகுதியில் விற்பனை செய்த எத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். இதனால் வாந்தி, மயக்கம், பேதி ஆகியவை ஏற்பட்டது. உயிருக்குப் போராடியவர்களைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, கதிர்காமம் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
இதில் சிகிச்சை பலனின்றி சங்கர், சுரேஷ், தணிகைவேல், ராஜமூர்த்தி, உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பகலவன், மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா மற்றும் காவல்துறையினர் நேரில் சென்று அப்பகுதியில் விசாரணை செய்தனர். அதோடு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களை சந்தித்து விசாரித்தனர். இதனையடுத்து, மரக்காணம் காவல் ஆய்வாளர் வடிவேல், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மரிய பேபி மஞ்சுளா, உட்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆரணி பகுதியில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கள்ளச்சாராயம் இருப்பது குறித்து செய்தி வெளியிட்டோம். இந்த நிலையில் தற்போது மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொருட்டு மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். அப்படியும் கள்ளச்சாராயம் குடித்து இறப்பது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா 5 லட்சம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மரக்காணம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் கள்ளச்சாராய வியாபாரி அமரனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.