கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்திலுள்ள நாச்சியார்பேட்டை பகுதியில் வசித்துவரும் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் கொட்டகை, 26.06.2021 அன்று எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது காற்றின் வேகத்தால் தீ மளமளவென அடுத்தடுத்து உள்ள தனலட்சுமி, முருகன், அசோகன் என்பவர்களுக்கு சொந்தமான வீடுகளிலும் பரவியது.
இவ்விபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், துணிமணிகள் என அனைத்தும் எரிந்ததால், அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்தது. இந்நிலையில், இந்த தீ விபத்து குறித்து அறிந்த தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு வருவாய்த் துறை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார்.
அப்போது, தங்கள் பகுதிகளில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் அவசர காலத்தில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கு முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிவருகிறோம். மேலும், தீயணைப்பு வாகனம் உள்ளே வர முடியாத சூழ்நிலையில் இந்த நான்கு வீடுகளும் முழுவதும் எரிந்து சாம்பலாயின எனவும், இதற்காக சாலை ஆக்கிரமிப்புகளை எடுத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார் அமைச்சர். இந்த நிகழ்வின்போது விருத்தாச்சலம் வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.