பிரதமர் மோடி 31,500 கோடி ரூபாயில் 11 திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கும் நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்து விழாவில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், '' இந்திக்கு இணையாக தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். தமிழக மீனவர்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை 14 ஆயிரத்து 6 கோடி ரூபாயை விரைந்து வழங்கிட வேண்டும். நீட் தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்" என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிரடியாக பேசியிருந்தார். குறிப்பாக 14 முறை பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தினார்.
இந்நிலையில் பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு தமிழக முதல்வர் பேசியது அரசியல் நாடகம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று விமர்சித்திருந்தார். மேலும் பேசிய அவர், " இந்தியாவையும், தமிழகத்தையும் பிரதமர் தரம் பிரித்துப் பார்த்தது இல்லை. மத்திய அரசுக்கு தமிழகம் 25 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும். இதனை நிதியமைச்சரால் மறுக்க முடியுமா? திமுகவுக்கும் பாஜகவுக்கும் 360 டிகிரி கொள்கை அடிப்படையில் வேறுபாடு உள்ளது" என்றார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு நேற்றே இணையவாசிகள் கிண்டல் அடித்த நிலையில், இந்த 360 டிகிரி பேச்சுக்கு தற்போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் ட்விட்டரில் படம் போட்டு பாடம் எடுத்துள்ளார். எதிர்காலத்தில் யுபிஎஸ்சி இந்த மாதிரியான கேள்விகளை தேர்வில் வைக்க முயற்சிக்க வேண்டும் என்று அண்ணாமலையை அவர் கிண்டல் செய்துள்ளார்.