கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக எதுவும் செய்யவில்லை எனவும் வேளாண் துறைக்கு 34 ஆயிரம் கோடி ஒதுக்கி நான் வாழ்நாளில் பார்த்ததில்லை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் அவர் பேசிய போது, “தொடர்ந்து சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு முதல்வர் நல்ல பணிகளை செய்து கொண்டுள்ளார். வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தந்துள்ளார். வேளாண் துறைக்கு 34 ஆயிரம் கோடி ஒதுக்கி நான் வாழ்நாளில் பார்த்ததில்லை. முதன் முதலில் நான் அமைச்சராகும் போது தமிழ்நாட்டின் பட்ஜெட் வெறும் 50 ஆயிரம் கோடி தான். இன்று வேளாண் துறைக்கு மட்டும் 34 ஆயிரம் கோடி தந்துள்ளார். 10 ஆண்டுகாலம் அதிமுக எதையும் செய்யவில்லை. எல்லா நகரங்களிலும் பேருந்து நிலையம் எல்லா நகரங்களிலும் மார்கெட் அனைத்து மக்களுக்கும் வசதிகள் கிடைக்க வழிவகை செய்துள்ளார்” என கூறினார்.
மேலும் பேசிய அவர், “மழைநீர் வடிகால் 1100 கிலோ மீட்டர் அளவிற்கு நடைபெறுகிறது என சொன்னால் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடைபெறுகிறது. இது இங்கு மட்டுமல்ல ஒவ்வொரு நகரங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் 1400 கோடி பணம். இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 1400 கோடி பணம் அனைத்து மக்களும் வசதி வாய்ப்புடன் இருக்க வேண்டும் என சொல்லி அதை செய்து கொண்டிருக்கிறார். இந்த நகர்ப்புற வளர்ச்சித் துறை கலைஞர் பார்த்த துறை என்பதால் தனி கவனத்துடன் செயல்படுகிறார்” எனக் கூறினார்.