சென்னையைடுத்த பல்லாவரம் சந்தையானது மிகவும் பிரபலமானது. இந்த சந்தையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் 300 ஜோடி செருப்புகளைத் திருடி இந்த சந்தையில் விற்றுவந்த 2 வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை பார்வையிட்ட போது அதில் மர்ம நபர் ஒருவர் அரைநிர்வாணமாக தவழ்ந்து நடந்து வந்து வீட்டின் முன் பகுதியிலிருந்த குழந்தைகளின் செருப்பு மற்றும் பெரியவர்களின் செருப்புகளைத் திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து அந்தப் பகுதியில் இதுபோன்று பல வீடுகளில் செருப்புகள் திருடப்பட்டு வந்த நிலையில், அந்தப் பகுதி மக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு புகாரளித்தனர்.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக சேலையூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்த பொழுது, அதே பகுதியில் பேக்கரி கடையில் வேலை செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார், லோகேஷ் குமார் உள்ளிட்ட மூன்று பேர் பிடிபட்டனர். பல நாட்களாக இரவு நேரங்களில் வீடுகளில் இருந்து செருப்புகளைத் திருடி நல்ல செருப்புகளாக இருக்கும்பட்சத்தில் அவற்றை பல்லாவரத்தில் வெள்ளிக்கிழமையானால் நடைபெறும் வாரச்சந்தையில் விற்றது தெரியவந்தது.