வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தூர்கேட் பகுதியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குத் தேவையான பேட்டரி கடையை அன்சர் பாஷா என்பவர் வைத்து நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவர் கடையில் வைத்திருந்த பேட்டரிகள் திருடு போயிருந்தது.
இதனால் அதிர்ச்சியானவர் இதுகுறித்து அப்பகுதி கடைகளில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்தபோது, இவரது கடையில் இருந்து சிலர் பேட்டரிகளை மூட்டை கட்டி எடுத்துச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து தனக்கு தெரிந்தவர்களிடம் சக தொழில் செய்பவர்களிடம் அன்சர் பாஷா வேதனையுடன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் சிலர் பேட்டரிகளை விற்க வந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. உடனே அன்சர் பாஷா தனது கடை ஊழியர்களுடன் சென்று பார்த்தபோது அவரது கடையில் திருடிய பேட்டரிகள் எனத் தெரிய வந்தது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பேட்டரி திருடிய 3 பேரை பிடித்து குடியாத்தம் நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் குடியாத்தம் அடுத்த கள்ளூர் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த அமீன் (22), சித்திக் (22), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த அக்பர் (20) என்பது தெரிய வந்தது. இளம் வயதில் திருடியது குறித்து போலீஸார் கேட்டபோது, என்ன வேலை செய்தாலும் எங்களுக்கு போதுமான அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. அதனால் வேலையே செய்யாமல் சொகுசாக வாழ திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டால் நன்றாக பணம் வரும் என்பதனைத் தெரிந்துகொண்டு திருட முயற்சி செய்தோம். தெரிந்தவர் ஒருவருக்கு பேட்டரி வாங்க முயன்றபோது அது நல்ல விலைக்கு விற்பது தெரிந்தது. அதைத் திருடி விற்றால் பாதி விலை வந்தால்கூட போதும் என்பதால் இந்த முறை பேட்டரிகளை திருட முயற்சி செய்தோம் எனச் சொல்லியுள்ளார்கள்.
இதையடுத்து 3 பேரையும் குடியாத்தம் நகர போலீசார் கைது செய்து இவர்கள் வேறு எங்கெல்லாம் திருடியிருக்கிறார்கள். இவர்கள் பின்னணி என்ன போன்றவற்றை விசாரணை நடத்தி வருகின்றனர்.