6 வாரத்திற்குள் காவிரி நீர் மேலாண்மை அமைக்க வேண்டும். காவிரி நீர் முறைபடுத்தும் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
தமிழகத்திற்கு வழங்கிய 14.75 தண்ணீரை குறைத்து வழங்கியது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கபடும்.
தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும்,விவசாய சங்க தலைவர்கள் ,தமிழ்நாட்டை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓன்றினைந்து அனைவரும் பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலான்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைபடுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவும் , உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள தமிழகத்திற்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தபடும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் காவேரி பிரச்சனை குறித்து இன்று (22.2.2018) சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காவேரி பிரச்சனையில், தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவேரி நதிநீரைக்கொண்டு விவசாயம் செய்து வரும் தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின் நலனைப் பேணிக்காக்கவும், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று பிறப்பித்துள்ள தீர்ப்பின்மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக இன்று (22.2.2018) காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
அ. தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரினை உரிய காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தின் 16.2.2018-ஆம் நாளிட்ட தீர்ப்பின்படி, ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டி வலியுறுத்தப்படும்.
ஆ. உச்சநீதிமன்றத் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு, காவேரி நடுவர் மன்றம் இறுதி ஆணையில் வழங்கிய நீரில், 14.75 டிஎம்சி அடி நீரை குறைத்து கர்நாடகத்திற்கு கூடுதலாக வழங்கி உத்திரவிட்டது குறித்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இ. மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை விரைவில் நேரில் சந்தித்து, காவேரி மேலாண்மை வாரியம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலுள்ள தமிழ்நாட்டிற்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்றித் தருமாறும் வலியுறுத்தப்படும்
படம்: அசோக்