
விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கிய பெண் எஸ்.ஐக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
சென்னை, மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அஷ்ரப். இவர் சென்னை மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, என் மகனுக்கும் முன்னாள் போலீஸ்காரரான ஜபாருல்லாகான் மகளுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தேன். ஜபருல்லாகானும் அவரது மகனும் அளித்த ஆசை வார்த்தைகளை கேட்டு என் மகனும் அவர்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளான். அதை வைத்து அவர்களும் 20 லட்சம் மதிப்பில் வீடு வாங்கியுள்ளனர். மேலும், என் மகனின் மாத சம்பளத்தையும் ஏமாற்றி வந்தனர். இதை என் மகன் என்னிடம் சொல்லி அழுதான், பின்னர் அவன் வேலை சம்பந்தமாக வெளிநாட்டுக்கு சென்றான்.
இந்தநிலையில் ஜபருல்லாகானும் அவரது மகனும், ‘‘என்னை ஏன் உன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பினாய் உன்னையும், உன் மகனையும் கொலை செய்து விடுவோம்’’ என்று மிரட்டி என்னையும் என் மனைவியையும் தாக்கினார்கள். இதன் பின் காஞ்சிபுரம் மகளிர் காவல்நிலைய எஸ்.ஐ மகிதா என்பவர் ஒரு நாள் இரவு எனது வீட்டுக்கு வந்து என்னை மிரட்டி எனது மகள் மற்றும் மனைவி ஆகியோரின் ஆடைகளை கிழித்து குடும்பத்தையே அவமாணப்படுத்தி மனித உரிமை மீறலுக்கு எதிராக செயல்பட்டனர். எனவே, மனித உரிமை மீறலுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.ஐ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த இந்த வழக்கில் பெண் எஸ்.ஐ மகிதா மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அரசு பாதிக்கப்பட்டவரிடம் செலுத்திவிட்டு மகிதாவின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும், அவர் மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடங்குவதற்கு முன்பு அவரை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி உத்தரவிட்டர்.