கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு திடீரென காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் காவல் பணி செய்த காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை ஆயுதப்படைப் பிரிவில் பணிபுரிந்து வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலருக்கு கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஊரடங்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு அவர் கடந்த ஒரு வாரமாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (04/04/2020) பணியில் இருந்த அவருக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டதையடுத்து சக போலீசார் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவிச் சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காய்ச்சல் தீவிரமாக இருந்ததால் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையம் முழுவதும் பேரூராட்சி பணியாளர்கள் சார்பில் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.
தொடர்ந்து காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டடிருந்த வாகனங்கள், அனைத்து பகுதிகளும், தளவாட சாமான்களும் கழுவி சுத்தம் செய்யப்பட்டதோடு, கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.