கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drug என்ற பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய போலீசாரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முஜீபூர் ரஹ்மான், வால்பாறை பகுதியைச் சேர்ந்த தாஸ் என்கிற மரியாசூசை மற்றும் சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த கதிரேசன் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 3.450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவுசெய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதுபோன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.