Skip to main content

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 29 பேர் கைது... 

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

29 arrested for not appearing in court

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புள்ள பலரது வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. அந்த வழக்குகளில் தொடர்ந்து பலமுறை ஆஜராகாமல் இருப்பவர்களை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து காவல்துறை மூலம் அவர்களைப் பிடித்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடும். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் மேற்படி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அப்படிப்பட்ட வழக்குகளில் சாட்சி அளிக்க வராமல் காலதாமதம் செய்தவர்கள் என பலரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

அப்படிப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் அவ்வப்போது தேடிவந்தனர். காவல்துறையினருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், சமீபத்தில் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பொறுப்பேற்ற பிறகு குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவருகிறார். காவல்துறையில் கடத்தல் சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் காவல்துறையினரைப் பணி மாறுதல் செய்வது உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினரிடம் பிடிபடாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடிப் பிடிப்பதற்கு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

 

அதன்படி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையில் இருந்த நீதிமன்றத்தின் பிடியாணையை விரைந்து நிறைவேற்றும் வகையில், காவல்துறையினர் மூலம் திடீர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட வைத்தார். அதன்படி ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இனிமேல் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், வழக்குகளில் சாட்சி கூற வேண்டிய நபர்கள் ஆகியோர் தவறாமல் ஆஜராகி வழக்கை முடித்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார் மாவட்டக் கண்காணிப்பாளர். இந்த அதிரடி நடவடிக்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்