'நிவர்' புயல் காரணமாக, காற்று பலமாக வீசுவதால், தற்பொழுது வரை 286 செல்ஃபோன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர், கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது, இந்தியக் கடற்படையின் 2 கப்பல்கள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
நிவர் புயலானது அதிகாலை 02:00 மணிக்குப் பிறகு கரையைக் கடக்க உள்ளதாக பேரிடர் மீட்புப் படை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். நிவர் புயலால் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்பொழுது, 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயலின் நகரும் வேகமானது, 13 கிலோ மீட்டராகக் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.