கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி, நகைப் பட்டறை உரிமையாளரிடம் 23 லட்சம் ரூபாய் சுருட்டிய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் லைன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. வேலூர் மாவட்டக் காவல்துறையில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர், தாதகாப்பட்டியைச் சேர்ந்த நகைப் பட்டறை உரிமையாளர் செந்தில்குமார் என்பவரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை வலை விரித்துள்ளார்.
இதை நம்பிய செந்தில்குமார், அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 47 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் தலைமைக் காவலர் முத்துசாமி, உறுதியளித்தபடி கிரிப்டோ கரன்சி மூலமாக லாபம் சம்பாதித்துக் கொடுக்கவில்லை. ஒருகட்டத்தில், செந்தில்குமார் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுமாறு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். இதையடுத்து 24 லட்சம் ரூபாய் மட்டும் முத்துசாமி திருப்பிக் கொடுத்துள்ளார். பாக்கித் தொகை 23 லட்சம் ரூபாயைத் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செந்தில்குமார் சேலம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், முத்துசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்கு ஏதுவாக இருக்க அவரை, வேலூர் மாவட்டத்தில் இருந்து சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்திருந்தனர். இதற்கிடையே அவர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். முத்துசாமி மீதான புகார் குறித்து சேலம் தெற்கு காவல் சரக துணை ஆணையர் மதிவாணன் விசாரணை நடத்தினார். அதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.