Skip to main content

இரண்டடி ஆழத்திலேயே 23 ஐம்பொன் சிலைகள்; சீர்காழியில் ஆய்வாளர்கள் ஆய்வு

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

23 idols of Impon found at a depth of two feet in Sirkazhi

 

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளையும் செப்பேடுகளையும் சென்னையிலிருந்து வந்த இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரத்தின் நடுவே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சட்டைநாதர் கோவில். இது தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான கோயிலாகும். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் உமையம்மை வழங்கிய ஞானப்பாலை அருந்தி தேவாரத்தில் முதல் பதிகத்தைப் பாடிய தலமான சட்டைநாதர் கோவிலுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. குடமுழுக்கை முன்னிட்டு கோவிலின் மேல கோபுர வாசல் அருகே நேற்று யாகசாலை அமைப்பதற்காக குபேர மூலையில் ஜேசிபி எந்திரம் மூலம் மண் எடுப்பதற்காகப் பள்ளம் தோண்டியபோது, பூமிக்கு அடியில் 2 அடி ஆழத்திலேயே அரை அடி முதல் 2 அடி உயரமுள்ள 23 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

 

சிலைகளோடு உடுக்கை, மணி, கலசம், சலங்கை, தீபத்தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களும், திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்கள் பதிக்கப்பட்ட 410 முழுமையான செப்பேடுகளும், 83 பின்னப்பட்ட செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டன. தருமபுர ஆதீனத்தின் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சிலைகள் மற்றும் செப்பேடுகளைப் பார்வையிட்டு சிறப்பு பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு வந்து சிலைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் 13 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாக இருக்கலாம் எனவும் இவை அனைத்தும் மதிப்பிட முடியாதவை எனவும் கூறப்பட்டது.

 

இதனையடுத்து சிலைகள் செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் வருவாய்த் துறைகளின் கண்காணிப்பில் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையிலிருந்து சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு வந்திருந்த இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவோடு செயல்படும்  திருக்கோவில் திருமடங்களின் ஓலைச் சுவடிகள், செப்பேடுகள் பராமரிப்பு பாதுகாப்பு நூலாக்கத் திட்டப்பணி முனைவர் தாமரை பாண்டியன் அறிவுறுத்தலின் படி ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா, சுவடி திரட்டுநர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தேவாரப் பதிகம் பதிக்கப்பட்ட செப்பேடுகளைப் பார்வையிட்டு அவை எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது; யாரால் எழுதப்பட்டது; என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தனர். 

 

முதற்கட்ட ஆய்வில் செப்பேடுகள் தலா 400 கிராம் எடையும் 68 சென்டிமீட்டர் நீளமும், ஏழு புள்ளி ஐந்து சென்டிமீட்டர் அகலமும் உடையதாக உள்ளது. கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் தேவாரப் பாடல்கள் செப்பேடுகளில் பதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை செப்பேடுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகளில் என்ன பதிகங்கள் உள்ளன; புதிய  தேவாரப் பதிகங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் எனத் தெரிவித்தனர். ஆய்வின்போது சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், கோவில் கண்காணிப்பாளர், மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் பத்ரி நாராயணன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு நடைபெறுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்