தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் 2200 பேருக்கு ஹெச்3என்2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் மா. சுப்ரமணியம் சென்னையில் இன்று கேரம் போட்டியை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மத்திய அரசு ஐசிஎம்ஆர் விதிமுறைகளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அனுப்பியது. ஹெச்3என்2 என்று சொல்லப்படுகிற வைரஸ் காய்ச்சலுக்கு பல்வேறு மாநிலங்களில் என்ன செய்வதென்று இருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்து நேற்று 1586 இடங்களில் அந்த முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் பரிசோதனை செய்துள்ளனர். அதில் 2200க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களது மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சல் உடையவர்கள் 3 நாட்கள் வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்வது நல்லது என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளனர் என்ற தகவலையும் சொல்லியுள்ளார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஐசிஎம்ஆர் விதிமுறைகளையும் கொரோனா விதிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியம். தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த காய்ச்சலுக்கான மருந்துகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.” எனக் கூறினார்.