Skip to main content

2021இல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்..! கல்வெட்டால் பரபரப்பு!!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

Chief Minister Edappadi in 2021, Deputy Chief Minister O.P.S.!  inscription issue !!

 

தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அருகே குச்சனூர் எனும் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் பிரசக்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வரர் கோவில் இருக்கிறது. இதே கிராமத்தில் காசி ஸ்ரீ அன்னபூரணி என்ற ஆலயமும் உள்ளது. இக்கோவில் நிர்வாகம் சார்பாக, கடந்த 30ஆம் தேதி கல்வெட்டு ஒன்று தயார் செய்யப்பட்டது. அதில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றிபெற்று முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓபிஎஸ்சும் மே மாதம் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இக்கல்வெட்டு குறித்து தகவல் வந்ததை தொடர்ந்து, சின்னமனூர் காவல்துறையினர் கோவிலுக்கு வந்து கல்வெட்டை கைப்பற்றிச் சென்றனர். தற்போது இக்கல்வெட்டின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருவது மட்டுமல்லாமல், ‘வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே அதிமுக வெற்றி பெற்றுவிட்டதாக கல்வெட்டு வைத்துவிட்டார்களா? அதிலும் முதல்வர், துணை முதல்வர் என குறிப்பிடப்பட்டது கூட சரி; பதவியேற்கும் நாளையும் குறித்துவிட்டார்களே’ என விமர்சித்து வருகின்றனர்.

 

இந்த காசி ஸ்ரீ அன்னபூரணி கோவிலை நிர்வாகம் செய்து வருபவர் வேல்முருகன் என்பவரின் தந்தை. வேல்முருகன் என்பவர் தேனியில் தலைமை காவலராக பணிபுரிந்தவர். அதிமுக விஸ்வாசியான இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி காவலர் சீருடையில் கோவிலில் முடி காணிக்கை செலுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து காவல் சீருடையிலே போராட்டத்தில் ஈடுபட்டவர். 

 

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவந்த வேல்முருகனுக்கு கட்டாய விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் கோவில் நிர்வாகத்தை கவனித்தவர், ஜெயலலிதாவிற்கு சிலை வைத்து வழிபட போகிறேன் என கூறிவந்தார். பின்னர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெறுவதற்கு முன்பே நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் என இதே கோவிலில் கல்வெட்டு வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்ற அதீத நம்பிக்கையில் இவர் வைத்த கல்வெட்டின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்