கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயிலில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து கொண்டே வந்துள்ளது.
இப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதைக் கண்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களிடம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து இப்பள்ளியில் ஆசிரியர்கள் ஒன்றுகூடிக் கலந்து ஆலோசித்துள்ளனர். அதனடிப்படையில் தற்போது 2020- 21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு அரசு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள் சார்பில் இப்பள்ளி குறித்து ஒரு வித்தியாசமான துண்டு நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு காட்டுமன்னார்கோயில் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அந்தத் துண்டுப் பிரசுரத்தில், "நமது காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மிகவும் பழமையான பள்ளி, இந்தப் பள்ளி பல சாதனையாளர்களை உலகிற்கு அளித்துள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்று கல்வி கற்கும் திறன்குறைபாடு உடைய ஏழை எளிய குழந்தைகளுக்கு தரமான கல்வியைக் கொடுக்கும் உன்னதப் பள்ளி. அப்படிப்பட்ட நம் பள்ளி இப்போது புதிய மாற்றத்தை நோக்கி நமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எனவே ஆறாம் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலா 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
இங்கு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கணினி வழி கல்வி, இலவசப் பேருந்து பயணச் சீட்டு, சிறந்த நூலக வசதி, ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பயிற்சி, சுத்தமான குடிநீர், அரசு அளிக்கும் கல்வி உதவித்தொகை பெற்றுத் தருதல், நீட் பயிற்சிக்கு தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தைப் பள்ளியே ஏற்கும். மாலை நேரத்தில் யோகா மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். மன அழுத்தம் இல்லாத கல்விமுறை, தோல்வியும் ஒருவித வெற்றிதான் என்று கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை முறை என மிகக் கடுமையான சவால்களையும் கூட எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு வெற்றி பெற தேவையான வழிமுறைகள் கற்றுத்தரப்படும். புதிய மாற்றத்தை நோக்கி மாறுபட்ட பரிமாணத்தில் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படும்" என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்களின் இந்த முயற்சி, பெற்றோர்கள் அரசுப் பள்ளியை நோக்கி தங்கள் பிள்ளைகளை அழைத்து வர வழி செய்யும். வரும் காலம் அரசுப் பள்ளிகளின் காலமாக மாறும் என்கிறார்கள் இப்பள்ளி ஆசிரியர்கள்.