திருச்சி கைலாஷ் நகர் அண்ணா சாலை 7-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52). இவர் மத்திய அரசுக்கு சொந்தமான திருச்சி பெல் நிறுவனத்தில் குவாலிட்டி சர்வேயராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமச்சந்திரன் தனது வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பெங்களூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். பின்னர் சில தினங்கள் அங்கு தங்கியிருந்த அவர்கள் மீண்டும் திருவெறும்பூர் திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும். வீடு பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டின் முன் பக்க கதவு பூட்டினை இரும்பு ராடால் நெம்பி திறந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ராமச்சந்திரன், திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அதில் ஒருவரது கைரேகை மட்டுமே பதிவாகியுள்ளது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. யாரையும் பிடிக்கவில்லை. பெல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.