கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை போட்டியினால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள ஆனைமடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (45). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஜெகன் (35) என்பவருக்கும் கள்ளச்சாராய விற்பனை செய்வது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தற்போது ஜெகன் சாராயம் விற்று வருவதாகத் தெரிகிறது.
இதையடுத்து நேற்றுமுன்தினம் ஜெகன் தரப்பிற்கும் அண்ணாமலை தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெகன் உறவினரை அண்ணாமலை தரப்பினர் தாக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஜெகன் நேற்று மதியம் தன் ஆதரவாளர்களை அழைத்துச் சென்று அண்ணாமலையைத் தாக்கியுள்ளார். இதில் அண்ணாமலை பலத்த காயமடைந்துள்ளார். இவருக்குக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டு மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கரியாலூர் பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர் அவ்வப்போது கல்வராயன் மலைக்குச் சென்று கள்ளச்சாராய ரெய்டு நடத்தி சாராய ஊறல்களையும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் தளவாடங்களையும் அழித்து வருகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சிய பலரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிலர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆனாலும் கல்வராயன் மலையும் கள்ளச்சாராயமும் காவல்துறையினரால் பிரிக்க முடியாத அளவில் உள்ளது.