டிவி சேனல்களை திறந்தாலே போதும் நடிகர் நடிகைகள், ‘உங்கள் அடகு வைக்கப்பட்ட நகைகளுக்கு வட்டிகட்டி... கட்டி... கட்டி நஷ்டம் அடைய வேண்டாம் அதை மீட்பதற்கு பணம் இல்லையா எங்களிடம் வாருங்கள் எங்கள் பணத்தை கொண்டு உங்கள் நகையை மீட்டு விற்பனை செய்து கடன் தொகைபோக உங்கள் பணத்தை கையோடு எடுத்து போகலாம்’ என விளம்பரங்கள் செய்வதோடு பணமும் கொடுத்து நகையை மீட்டு விற்பனை செய்ய உதவி செய்து வருகின்றன பல நிதி நிறுவனங்கள் இதற்காக பல தனியார் நிறுவனங்கள் பெரிய நகரங்களில் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு நிதி நிறுவனங்களில் ஒன்று கடலூர் பாரதி சாலையில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் மேலாளராக விஸ்வநாதன் என்பவர் பணி செய்து வருகிறார். இவரிடம் கடலூர் அருகே உள்ள புது உப்பலவாடி பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் தனக்கு சொந்தமான எழுபத்தி எட்டு பவுன் தங்க நகைகளை இம்பீரியல் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்துள்ளதாகவும் அந்த நகைகளை மீட்டு விற்பனை செய்துவிட்டு மீதி பணத்தை தனக்கு தருமாறு கேட்டுள்ளார். நிதி நிறுவன மேலாளர் விசுவநாதன் ஜானகிராமன் அடமானம் வைத்துள்ள வங்கிக்கு போன் செய்து ஜானகி ராமன் சொல்வது உண்மைதானா என்று விவரம் கேட்டுள்ளார் அவர்களும் ஜானகிராமன் தங்கள் வங்கியில் நகைகள் அடமானம் வைக்கப்பட்டு உள்ளது உண்மை, அதற்கான அசல் வட்டி தொகை மொத்தம் 19 லட்சத்து 47 ஆயிரம் என்று கூறியுள்ளார். அதையடுத்து விஸ்வநாதன் அந்த நகைகளுக்கான பணம் முழுவதையும் தனது நிதி நிறுவனத்தில் இருந்து அந்த வங்கிக்கு ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார்.
அதன்பிறகு நகைக்கு சொந்தக்காரரான ஜானகிராமனை அழைத்துக்கொண்டு நகை வாங்குவதற்காக அந்த வங்கிக்கு சென்று உள்ளார். அதற்கு முன்பே ஜானகிராமனின் நண்பர்கள் சென்னை டிபி சத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் ஆவடியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரும் வங்கியில் காத்திருந்தனர். வங்கியில் இருந்து நகைகளை வாங்கிய ஜானகிராமன் அதை நிதி நிறுவன மேலாளர் விசுவநாதன் இடம் கொடுக்காமல் தனது நண்பர்களான முத்துக்குமார் முருகனிடம் கொடுத்துவிட்டு அனுப்பிவிட்டார்.
நிதி நிறுவன மேலாளர் விஸ்வநாதன் நகைகளை விற்பனை செய்து தங்கள் நிதி நிறுவனத்திற்கு சேர வேண்டிய பணத்தை எடுத்து கொள்வதற்காக நகைகளை கேட்டபோது சாக்குப்போக்கு சொல்லிவிட்டு ஜானகிராமன் எஸ்கேப் ஆகிவிட்டார். இதையடுத்து நிதி நிறுவன மேலாளர்கள் விஸ்வநாதன் கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் பணமோசடி செய்த ஜானகிராமன் அவரது நண்பர்கள் முத்துக்குமார் முருகன் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான அந்த மூன்று பேரையும் தேடிவந்தனர் இதற்காக இன்ஸ்பெக்டர் குணசேகரன் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த ஜானகிராமன் முருகன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துக்குமரனை தேடி வருகின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள முத்துக்குமார் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக உள்ளவர். இவர் ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிதி நிறுவனத்தில் பணி செய்யும் மேலாளர்கள் ஊழியர்கள் இதுபோன்ற மோசடி ஆசாமிகளுக்கு பணத்தை கொடுத்துவிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நிலை உள்ளது. எனவே நிதி நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்கள் உஷார்..... உஷார்...... உஷார்..... என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.