Skip to main content

18 ரயில்கள் ரத்து- தொடரும் மீட்புப்பணிகள்

Published on 12/10/2024 | Edited on 12/10/2024
 18 Trains Cancelled- Rescue Operations Continued

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிகார் மாநிலம் தர்பங்காவிற்கு ‘பாக்மதி எஸ்பிரஸ்’ என்ற பயணிகள் ரயில் (ரயில் எண் : 12578) இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் பெரம்பூரில் இருந்து நேற்று (11.10.2024) இரவு 07.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 08.27 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் இந்த ரயில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்தன. அதோடு பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டது.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணியானது நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவு பெற இன்னும் 12 மணி நேரம் ஆகும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக விபத்து நடந்த இடத்திலிருந்த பயணிகள் அனைவரும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில்கள் மூலம் இரவே அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதி ஆகியவை செய்து தரப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 18 ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருப்பதி-புதுவை (16111), சென்னை-திருப்பதி (16203), சென்னை-திருப்பதி (16053) ஆகியவை இரண்டு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை-திருப்பதி(16057), அரக்கோணம்-புதுவை (16401), கடப்பா-அரக்கோணம்(16402), அரக்கோணம்-திருப்பதி (06754), விஜயவாடா-சென்னை (12711), சூலூர்பேட்டை-நெல்லூர் (06745) உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவின் பேரில் உயர்மட்ட குழுவானது இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்