திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இருக்கும் பள்ளப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோத மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை நடை பெறுவதாக அம்மையநாயக்கனூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனையடுத்து மது விற்பனை நடைபெறுவதாகக் கூறப்பட்ட வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு நடத்திய விசாரணையில், மணிகண்டன் என்பவரின் மனைவி ஆனந்தி மது விற்றுவந்தது தெரியவந்தது. அரசு மதுபானக் கடை நடத்துவது போல் அந்த வீட்டில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான, 1355 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த ஆனந்தியைக் கைது செய்தனர்.
மேலும், ஆனந்திக்கு அரசு மதுபானக்கடை மது பாட்டில்களை மொத்தமாகப் பெட்டி பெட்டியாகக் கொடுத்தது யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொது முடக்க வேளையில் அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில், நிலக்கோட்டை பகுதி முழுவதும் ஆங்காங்கே அரசு மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.