சென்னை புத்தகக் காட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சென்னை புத்தகக் காட்சிக்கு வருகை தந்தார். அதைப்பற்றி அவர் தனது சமூகவலைதளம் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் அவர், “இன்று சென்னையில் நடைபெறும் 45-வது புத்தக கண்காட்சிக்கு தோழமைகளுடன் சென்றிருந்தேன். ஈராண்டுகளாக கரோனா நெருக்கடிகளால் களை இழந்த புத்தக திருவிழா இவ்வாண்டு எழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. நல்ல கூட்டம். புத்தகங்கள் வாங்க குவிந்த பிரியர்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என எங்கும் மக்கள் திரள்! இங்கு வருவதே ஒரு அறிவு சுற்றுலாவாகும்.
எம்மை போன்றவர்களுக்கு இது மன எழுச்சியை ஏற்படுத்தும் நிகழ்வு. நமக்கு பிடித்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள், நமக்கு தெரியாத படைப்பாளிகள் எழுதிய நூல்கள் என அவற்றுடன் சங்கமிக்கும் அனுபவங்கள் அலாதியானது. நாம் எதிர்பார்க்காத புத்தகங்கள் நம்மை வசப்படுத்துவதை தவிர்க்க முடியாது. ஃபிஜித்தீவு (கரும்புத் தோட்டத்திலே..) என்ற நூல் அப்படி என்னை வசப்படுத்தியது. தமிழகத்திலிருந்து சென்ற தொழிலாளிகளின் கண்ணீர் வரலாறு குறித்த நூல் அது.
புத்தகங்களின் தலைப்புகள் ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது. ஜேக் வெதர் ஃபோர்ட் என்பவர் எழுதிய 'செங்கிங்கானும் நவீன உலகின் உருவாக்கமும்' என்ற நூல் அந்த வகையாகும். புத்தகங்கள் அழகாக அடுக்கப்பட்ட விதம் ஒரு வித விற்பனை புதுமை எனலாம். அப்படி ஒரு கடையில் உற்று பார்த்தப் போது, 1559-ல் ரோமப் பேரரசால் தடை செய்யப்பட்ட 'The Prince ' என்ற நூல் கிடைத்தது. அது இத்தாலிய சாணக்கியன் நிக்கோலா மாக்கிய வல்லி குறித்த பரபரப்பான நூலாகும்.
இங்கு பயணிக்கும் போது அன்பர்கள் நம்மை தேடி வந்து அளவளாவுவதும், செல்ஃபி எடுப்பதும் ஒரு வித அனுபவமாகும். அதுபோல் நாம் சந்திக்க விரும்பும் பலரையும் சந்திக்கும் வாய்ப்பும் இங்கு ஏற்படுகிறது. ஐயா. நீதியரசர் சந்த்ரு அவர்களை சந்தித்து அவர் எழுதி பரபரப்பாக விற்பனையாகும் 'நானும் நீதிபதியானேன்' என்ற நூலை பெற்றுக் கொண்டேன். அவரது புரட்சிகர; மனிதநேய தீர்ப்புகள் வரலாற்று குறிப்புகளாகும். அந்நூலில் நீண்ட கால சிறைவாசி மதானி குறித்து தான் எழுதியதை மறவாமல் வாசியுங்கள் என்றார். அவர் ஒரு மனித உரிமை சிந்தனையாளர் அல்லவா?
அடுத்து அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களை சந்தித்தப் போது தனது 'போர்க்களம்' நூலை பரிசளித்தார். அவரிடம் எப்போதும் காணப்படும் உற்சாகம் அப்போதும்! எனக்கு அவர் கையெழுத்திட்டு தந்த நூலில் எழுதிய வாசகம் கவனிக்க வைத்தது. அது, 'வெற்றியின் அடையாளம் துணிச்சல்; துணிந்தவர் தோற்பதில்லை' என்பதாகும்!! இருவரும் காலம் சென்ற 'வார்த்தை சித்தர்' வலம்புரி ஜானின் நினைவுகள் குறித்து பேசிக் கொண்டோம்.
வலம்புரி ஜானையும், சின்னக்குத்தூசி யாரையும் நக்கீரன் கொண்டாடுவதை அவரிடம் பாராட்டினேன். பல கடைகளுக்கு சென்ற போது அவர்கள் தங்களது புதிய படைப்புகளை வெளியிட கூறி என்னோடு படம் எடுத்து கொண்டனர். நமது நட்பு வட்டாரங்களுக்கு அந்த நூல்கள் சென்று சேர வேண்டும் அதன் நோக்கமாகும். நானும் அதை எனது முகநூலில் வெளியிடுவதாக கூறினேன். இன்றைய நிகழ்வில் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்தது. நான் 3 ஆண்டுகளாக தேடி கொண்டிருந்த அந்த புத்தகம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அது பண்டைய சீன தளபதி சன் - ஸு எழுதிய 'போர்க் கலை' நூலாகும். இப்படி பல அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் இங்கு கிடைக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.