மருத்துவருக்கு 1.55 லட்சம் அபராதம்
அரும்பாக்கம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவரது மகள் நித்தியஸ்ரீ கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நேரு விளையாட்டு அரங்கில் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கிழே விழுந்ததில் கை உடைந்துள்ளது. அவரை பச்சையபாஸ் கல்லூரி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கை எலும்பு உடைந்திருந்ததால் அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் நித்தியஸ்ரீக்கு கையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இருந்தும் அவருக்கு வலி தீரவில்லை. மீண்டும் மருத்துவரை சந்தித்துள்ளனர்.
அவர் அப்போது கையில் பிளேட் வைக்க வேண்டியுள்ளது. அதற்கு ரூ.30 ஆயிரம் செலவாகும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு ரூ.28 ஆயிரம் செலவு செய்திருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த நித்தியஸ்ரீயின் தாய் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சோதித்த மருத்துவர், ஏற்கனவே செய்யப்பட்ட அறுவைசிகிச்சை சரியாக செய்யவில்லை என்று கூறினர்.
இதனையடுத்து ஸ்ரீதேவி சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவரிடம் இருந்து ரூ.1 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோனி தவறான சிகிச்சை அளித்ததற்குதம் ரூ.1லட்சத்து 55 ஆயிரம் அபராதம் 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.