Skip to main content

ஆறு மாத கர்ப்பிணியான 14 வயது சிறுமி; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

A 14-year-old girl who is six months pregnant; Chennai High Court verdict!

 

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் 14 வயது மகளுக்கு சில நாட்களாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. மகளின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்ததால் கவலை அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்தபோது, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் உறவுக்கார இளைஞர் தவறாக நடந்து கொண்டதும், வெளியில் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட இளைஞர் மீது செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், அந்த சிறுமியின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் அவர் கருவுற்றிருப்பது தொடர்ந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருக்கலைப்பு சட்டக் குழு அறிக்கை அளித்துள்ளது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் கர்ப்பமான அந்த சிறுமியின் தந்தை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மகள் படிப்பை தொடர விரும்புகிறார். தற்போதைய நிலையில் கருவை சுமக்க விரும்பவில்லை. எனவே, தனது மகளின் 24 வார கருவை கலைக்க திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தொடர்ந்து கருவை சுமந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் கருக்கலைப்பு சட்டக் குழு அளித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, 2 வாரங்களில் சிறுமியின் கருவை கலைக்க திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்