சேலத்தில் கரோனா ஊரடங்கின்பேரில் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருள்களின் விலையும் தாறுமாறாக எகிறியுள்ளன.உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க சத்தான காய்கறிகள், கீரைகள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வந்தாலும் இப்போதுள்ள நிலையில், கடும் விலையேற்றத்தால் காய்கறிகளை தினக்கூலிகள் வாங்கி உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கையில் காசு இருந்தாலும், உழவர் சந்தை உள்ளிட்ட அனைத்து காய்கறி சந்தைகளிலும் நிரம்பி வழியும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் விரும்பிய காய்கறிகளை வாங்கி வர முடியாத நிலையும் உள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 14 அத்தியாவசியமான காய்கறிகள் கொண்ட தொகுப்பை 100 ரூபாய் என்ற மலிவு விலையில் விற்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி சேகர் கூறுகையில், ''காய்கறி தொகுப்பில் மொத்தம் 14 வகையான காய்கறிகள் உள்ளன.தக்காளி, பெரிய வெங்காயம், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், கத்தரிக்காய், முருங்கைக்காய் ஆகியவை தலா 1 கிலோ வீதம் உள்ளன.இவைத் தவிர பச்சை மிளகாய்,கீரை, கொத்தமல்லி,கறிவேப்பிலையும் இதில் அடங்கும்.இவை உள்பட மொத்தம் 14 வகையான காய்கறிகள் இடம்பெற்றுள்ளன.இத்தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு இந்த காய்கறி தொகுப்பு ஒரு வாரத்திற்குப் போதுமானதாக இருக்கும்.கூட்ட நெரிசல், விலையேற்றத் தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.முதல்கட்டமாக 100 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.வரும் காலங்களில் அதிகளவில் காய்கறி தொகுப்பு விற்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.