புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது செம்பட்டிவிடுதி. அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமம் கதுவாரிப்பட்டி. இந்த கிராமத்தில் தனியார் நடத்தும் பெரிய குடோன் உள்ளது. இந்த குடோனில் ஐ.டி.பி.ஐ. வங்கி விவசாயிகளிடம் இருந்து அடமானம் வாங்கும் நெல் மூட்டைகளை வைத்து பாதுகாக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி கடந்த சில ஆண்டுகளில் சுமார் 24 ஆயிரம் நெல் மூட்டைகளை குடோனில் வைத்துள்ளனர்.
ஆனால் தற்போது அதில் 12500 நெல் மூட்டைகளை காணவில்லை. அதனால் வங்கி அதிகாரிகள் சென்று கேட்ட போது குடோன் நிர்வாகம் சரியான பதில் சொல்லாததால் வங்கி நிர்வாகம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து போலிசார் வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டது.
இந்தநிலையில்தான் ஐ.டி.பி.ஐ. வங்கியின் கும்பகோணம் தலைமை அலுவலகத்தின் துணைப் பொதுமேலாளர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் மீண்டும் ஆய்வு செய்த பிறகு குடோன் மேலாளர் திண்டுக்கல் ரமேஷ்குமார், உள்ளூர் மேலாளர் விஜயகுமார், மாநிலபொறுப்பாளர் முருகப்பா ஆகியோர் மீது செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
குடோனில் இருந்த 12500 நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் குடோன் அதிகாரிகள் மட்டுமா அல்லது வங்கி அலுவலர்களின் பங்கும் உள்ளதா என்பது குறித்தும் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.