எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல்துறை, கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட காணாமல்போன மற்றும் களவுபோன செல்போன்களை, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
1,193 செல்போன்கள் களவு போன வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆணையாளர் மகேஷ் அகர்வால் உத்தரவு பிறப்பித்திருந்தார். குறிப்பாக கடந்த ஜூலை 31ஆம் தேதி 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவினரால் தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினரால் காணாமல்போன செல்போனை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து களவு போன செல்போனகளை கண்டறிந்து உரியவர்களிடம் இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால், களவுபோன செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண் கொண்டு வேறு மாநிலத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட போன்களும் மீட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பொது இடங்களில் செல்போன் பேசி செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மேலும் செல்போன் காணாமல் போனால் உடனடியாக அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவித்தார்.