




சேலத்தில் நக்கீரன் செய்தியாளர் ஒருங்கிணைப்புடன், நலிவுற்ற 55 குடும்பத்தினருக்கு 1.12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
நக்கீரன் வாரமிருமுறை இதழ், சமூக அவலங்களையும், அதிகார வர்க்கத்தினரின் ஊழல்களையும் பொதுவெளிக்கு அம்பலப்படுத்துவதன் மூலம் வெளிப்படையான நிர்வாக நடைமுறைக்கு உழைத்துவருகிறது. மேலும், வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம், சமூகத்தில் நலிவுற்ற பிரிவினரின் துயரங்களில் நேரடியாக பங்கெடுத்துக்கொண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவிவருகிறது.
அதன்படி, சேலம் மாவட்ட நக்கீரன் செய்தியாளர் இளையராஜா ஒருங்கிணைப்புடன், 'புதிய அகராதி - பயன்மரம்' வாட்ஸ்ஆப் நண்பர்கள் குழு சார்பில், சேலம் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பு, வருவாய் இழந்து தவித்துவரும் 55 நலிவுற்ற குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக 1.12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.
அதாவது, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு மாதத்திற்குத் தேவையான 25 கிலோ பொன்னி புழுங்கல் அரிசி ஒரு சிப்பம், 5 கிலோ நரசுஸ் கோதுமை மாவு ஒரு சிப்பம், பருப்பு, புளி, மிளகாய் வற்றல், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சமையல் எண்ணெய், உப்பு, பேரீச்சம் பழம், கருப்பு பீன்ஸ், பிஸ்கட் உள்ளிட்ட 28 மளிகைப் பொருட்கள், சானிட்டரி நாப்கின் ஆகியவை கொண்ட தொகுப்பு தலா 2,037 ரூபாய் மதிப்பில் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கப்பட்டது.
'புதிய அகராதி - பயன்மரம்' வாட்ஸ்ஆப் குழுவில் உள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட பலரின் பங்களிப்புடன் இந்த நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேலம் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, நாம மலை, சாமிநாதபுரம், சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நலிவுற்ற ஆட்டோ ஓட்டுநர்கள், கைத்தறி நெசவாளர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த குடும்பத் தலைவிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் என மிகுந்த கவனமாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டும் கரோனா ஊரடங்கின்போது 20 குடும்பத்தினருக்குத் தலா 1,985 ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், ஊரடங்கால் கல்விக்கட்டணம் செலுத்த இயலாமல் படிப்பைப் பாதியில் கைவிட்ட கல்லூரி மாணவிக்கு கல்விக்கட்டணம், சிகிச்சை செலவுக்கு வசதியின்றி தவித்துவந்த கேன்சர் நோயாளி ஒருவருக்கு சிகிச்சைக்கான நிதியுதவி ஆகிய உதவிகளையும் இக்குழு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.