வேலை வாங்கி தருவதாக கூறி 11 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நபர் ஒருவரை அடித்துக் கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பம்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கணேசன். இவருடைய நண்பன் வெங்கடேசன் சென்னையில் வசித்து வருகிறார். வெங்கடேசனிடம் அரசு வேலை வேண்டும் எனக் கணேசன் கேட்டுள்ளார். இதற்காக 11 கோடி ரூபாயை கணேசன் வெங்கடேசனுக்கு கொடுத்துள்ளார். பல மாதங்களாகியும் வேலை கிடைக்காததால் பணத்தை கணேசன் திரும்பக் கேட்டுள்ளார்.
இதனால் வெங்கடேசனை பலமுறை தொடர்புகொண்டு பணத்தைத் தரும்படி கேட்டுள்ளார். தொடர்ந்து வெங்கடேசன் பணம் தரமறுத்த நிலையில் மிரட்டல் விட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி வெங்கடேசன் பொள்ளாச்சி சென்று விட்டு சேலம் அருகே வந்த பொழுது வழிமறித்த கணேசன் மற்றும் அவருடைய நண்பர்கள் விக்னேஷ், நித்தியானந்தம் ஆகிய மூன்று பேரும் வாகனத்தை வழிமறித்து ஊத்தங்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள கல்குவாரி ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவரை மிரட்டி தாக்கி கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஆசிரியர் கணேசன், விக்னேஷ், நித்தியானந்தம் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.