கரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதனையடுத்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குறுங்குடி கிராமத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்ற பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன், தாம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை சந்தோஷமாக போஸ்டர் அடித்து வெளிப்படுத்தியுள்ளார். அதில் பத்தாம் வகுப்பில் என்னை பாஸ்போட்டு வரலாற்றுச் சாதனை படைத்த ஐயா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி எனவும் மேலும் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த எனது ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த போஸ்டரில் அந்த மாணவன் தன் தலைக்கு மேலே இரு கைகளையும் உயர்த்தி கும்பிட்டபடி நன்றி நன்றி நன்றி என்றபடி, அரசியல்வாதிகள் மக்களிடம் ஓட்டு கேட்கச் செல்லும்போது வேட்பாளர்கள் கும்பிடுவது போன்று உள்ளது. இந்தப் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.