கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 27ல் நடக்கவிருந்த இறுதி தேர்வுகள் ரத்தானது. பள்ளியில் நடைபெற்ற காலாண்டு, அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் ரிசல்ட் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை இணையதளத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 4,71,759 பேரும், மாணவிகள் 4,68,070 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தேர்வு எழுத பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் 6,235 பேர் தேர்ச்சியாகி உள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52,741 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகளே தேர்ச்சியில் முதலிடம் வகித்து வரும் நிலையில், தற்போது முதல் முறையாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மொத்தமாக 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 9,39,829 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு ஏற்கனவே அறிவித்தபடி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் அளித்த கைபேசி எண்ணிற்கு முடிவுகள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் முடிவுகளை www.tnresults.inc.in,dge1.tn.nic.in,dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம். மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் ஆகஸ்ட் 17 முதல் 25 ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.