Published on 05/05/2020 | Edited on 05/05/2020
நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்க்கும் பணியை சிதம்பரம் பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் செய்துவருகிறார்கள்.
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் மருத்துவ செவிலியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்களை கௌரவிக்கப்படுகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு நிவாரண உதவிகளை யாரும் கொடுக்க முன் வரவில்லை. இதனையறிந்த அதிமுக சிதம்பரம் இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா மற்றும் சமூக ஆர்வலர் சித்து ஆகியோர் சிதம்பரம் பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தனர்.
இதனை சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் அனைவருக்கும் வழங்கினார். மேலும் இந்த ஊரடங்கு நேரத்தில் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு அனைவரும் உதவிகளை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.